பாலு மகேந்திரா நூலக இணையத்தள வெளியீடு

பாலுமகேந்திரா நூலகத்தின் திறப்பு விழா நிகழ்வானது 27.12.2020 அன்று மாலை 6 மணி தொடக்கம் இரவு 9.30 மணி வரை கிளிநொச்சியில் அமைந்துள்ள நூலக வளாகத்தில் நடைபெற்றது. குறித்த நிகழ்வினை நேரடியாக நடாத்துவதில் கொவிட்-19 நிலைகளின் காரணமாக இணையத்தளம் ஊடாகவே இந்த நிகழ்வு இடம்பெற்றிருந்தது.
வானொலி அறிவிப்பாளர் விஜிதா மயில்வாகனம் அவர்களால் தொகுத்து வழங்கப்பட்ட நிகழ்வானது, தாயக நேரம் மாலை 6 மணிக்கு ஆரம்பித்திருந்தது. இதன் முதன் நிகழ்வாக அமைதி வணக்கம் இடம்பெற்றதைத் தொடர்ந்து மங்கள விளக்கேற்றல் இடம்பெற்றது. மங்கள விளக்கினை ஈழத்தின் முதுபெரும் பாடகி பார்வதி சிவபாதம், நூலகத்தின் தலைவர் ரம்யா டெறோன், செயலாளர் கம்ஜினி இராமகிருஷ்ணன், பொருளாளர் ரவீந்திரன் கோபிஷாந் ஆகியோர் ஏற்றிவைத்தனர்.
இதனைத் தொடர்ந்து, பார்வதி சிவபாதம் அவர்களால் தமிழ்மொழி வாழ்த்து இசைக்கப்பட்டது. அடுத்து பாலுமகேந்திரா நூலகத்தின் செயலாளர் கம்ஜினி இராமகிருஷ்ணன் அவர்கள் வரவேற்புரை ஆற்றியிருந்தார். அதனைத் தொடர்ந்து பாலுமகேந்திரா நூலகத்தின் தலைவர் ரம்யா டெறோன் அவர்கள் தலைமை உரை ஆற்றியதுடன், பாலுமகேந்திரா நூலகத்தின் செயற்பாடுகள் மற்றும் அதன் உருவாக்கம் குறித்த முன்னளிக்கையினையும் வழங்கியிருந்தார்.
தொடர்ந்து, பாலுமகேந்திரா நூலக இணையதள வெளியீட்டு விழாவின் சிறப்பு அதிதிகளில் ஒருவராகக் கலந்துகொண்ட ஆவணப்பட இயக்குனர் சோமிதரன் அவர்கள் இயக்குனர் பாலுமகேந்திரா அவர்களுடனான நினைவுகளைச் சுமந்த தனது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்.
அடுத்து, நிகழ்வின் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்ட இயக்குனர் இமயம் பாரதிராஜா, யாழ் பல்கலைக்கழக ஊடகத்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி எஸ்.ரகுராம், ஈழத்து திரைப்பட செயற்பாட்டாளர் காசிநாதர் ஞானதாஸ், நாடகத்துறைப் பேராசிரியர் மௌனகுரு, சிரேஷ்ட ஊடகவியலாளர் கணபதி சர்வானந்தா ஆகியோர் பாலுமகேந்திரா நூலகத்தின் செயற்பாடுகளைப் பாராட்டி வாழ்த்துரை வழங்கியிருந்தனர்.
மேலும், பாலுமகேந்திரா நூலக இணையதள வெளியீட்டு விழாவின் முதன்மை அதிதியாகக் கலந்துகொண்ட உலகப் புகழ்பெற்ற ஈரானியத் திரைப்பட இயக்குனர் மஜித் மஜிதி அவர்கள் நூலகத்தின் இணையதளத்தினை வெளியிட்டு வைத்ததுடன், முதன்மை உரையையும் ஆற்றியிருந்தார்.
இதனையடுத்து, பாலுமகேந்திரா நூலகத்தின் தலைவர் ரம்யா டெறோன் அவர்கள் பாலுமகேந்திரா நூலகத்தின் இணையதளம் பற்றிய அறிமுகவுரையையும், குறித்த இணையத்தளத்தின் பாவனை பற்றியும் கருத்துரை வழங்கியிருந்தார்.
தொடர்ந்து, பாலுமகேந்திரா நூலகத்தின் இணையதள வெளியீட்டு விழாவில் சிறப்பு அதிதிகளாக கலந்து கொண்ட சர்வதேச விருது பெற்ற புலம்பெயர் ஈழத்து இயக்குனர் லெனின்.எம்.சிவம், சூப்பர் சிங்கர் புகழ் சின்மயி சிவகுமார், நாடகத்துறையின் முன்னோடிகளில் ஒருவரான ஏ.சி.தாசீசியஸ், சிங்கள திரைப்பட இயக்குனர் பிரசன்ன விதானகே, சர்வதேச திரைப்பட விழாக்களின் ஒருங்கிணைப்பாளரும், மத்தியஸ்தருமான குளோரியா செல்வநாதன், ஈழத்தின் எழுத்தாளர் தம்பிஐயா தேவதாஸ், சொல்லிசைக்கலைஞர் சுஜித்ஜீ, சர்வதேசப் புகழ்பெற்ற வானொலி ஒலிபரப்பாளர் அப்துல் காமித் ஆகியோரும் நூலகத்தின் செயற்பாடுகளுக்காக வாழ்த்துரை வழங்கியிருந்தனர்.
இதனையடுத்து, பாலுமகேந்திரா நூலகத்தின் செயலாளர் கம்ஜினி இராமகிருஷ்ணன் அவர்களால் நன்றியுரையாற்றப்பட்டதைத் தொடர்ந்து நூலக திறப்பு விழா நிகழ்வானது இரவு 9.30மணி அளவில் இனிதே நிறைவு பெற்றது.

News & Event