ராஷோமொன் [羅生門 Rashōmon]

பாலு மகேந்திரா நூலகத்தின் இவ்வாரத் திரையிடல் மற்றும் கலந்துரையாடலுக்காகத் தேர்வு செய்யப்பட்டுள்ள திரைப்படம் “Rashōmon” [09].


ஜப்பானிய இயக்குனர் அகிரா குரோசாவா (Akira Kurosawa) இயக்கத்தில் 1950 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் Rashōmon ஆகும்.


இந்தத் திரைப்படத்தின் கதை மற்றும் கதாபாத்திரங்கள் என்பன ரியுனோசுக் அகுடகாவா (Ryunosuke Akutagawa) என்பவரின் In a Grove என்ற சிறுகதையையும், தலைப்பு மற்றும் ஃப்ரேமிங் கதை என்பன Rashomon என்ற அவரது மற்றுமொரு சிறுகதையையும் தழுவி படமாக்கப்பட்டுள்ளன.


ஒரு மணப்பெண் பாலியல் வன்புணர்வு செய்யப்படுவதுடன், அவளது கணவன் கொலை செய்யப்படுகின்றான். குறித்த கொலையை செய்தவர் தொடர்பில் அந்த மணப்பெண் மற்றும் அவளது கணவனின் ஆத்மா, கொள்ளைக்காரன் ஒருவன் மற்றும் ஒரு விறகுவெட்டி ஆகியோரிடம் மேற்கொள்ளப்படும் விசாரணையைக் கதைக்களமாகக் கொண்டமைந்த திரைப்படம் இதுவாகும்.


இந்த திரைப்படம், 1951 இல் வெனிஸ் திரைப்பட விழாவில் கோல்டன் லயன் உட்பட பல விருதுகளை வென்றதுடன், 1952 இல் நடைபெற்ற 24 ஆவது ஒஸ்கார் விருது விழாவில் இதுவரை வெளிவந்த பிரமிப்பூட்டும் பெரிய திரைப்படங்களில் ஒன்று என்ற அங்கீகாரத்தையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


பிரதி சனிக்கிழமை தோறும் மாலை 3 மணிமுதல் மாலை 7 மணிவரை, முதலாம் மாடி, கூட்டுறவு மண்டபம், பேருந்து தரிப்பிடச் சந்தி, கிளிநொச்சியில் அமைந்துள்ள பாலு மகேந்திரா நூலகத்தில் திரைப்படத்திரையிடல் மற்றும் கலந்துரையாடல் நடைபெற்றுவருகின்றது.


இந்த திரையிடல்களின் போது, பெரும்பாலும் சர்வதேசத் திரைப்படங்கள் மற்றும் ஈழத்துத் திரைப்படங்கள் திரையிடப்பட்டு கலந்துரையாடப்படும்.


அத்துடன், பிரத்தியேக திரையிடல்களின் போது, அத்திரைப்படத்தில் பணிபுரிந்த கலைஞர்கள் அல்லது தொழில்நுட்ப கலைஞர்களுடனான கலந்துரையாடல்களும் இடம்பெறும்.


அதேநேரம், இதுவரையில் பொது வெளியில் வெளியிடப்படாத திரைப்படங்கள் திரையிடப்படும் சந்தர்ப்பங்களில், தயாரிப்பாளர் அனுமதித்தால் மாத்திரமே இணைய வழிக் கலந்துரையாடல் திறந்துவிடப்படும்.


இத்திரையிடல்களில் அதிகப்படியாக 25 நபர்கள் மட்டுமே பங்குபற்ற முடியும் என்பதால் உங்கள் வருகைகளை முற்பதிவு செய்வது அவசியம். அத்துடன், இணைய வாயிலாக இக்கலந்துரையாடல்களில் கலந்து கொள்ள விரும்புபவர்கள், முற்கூட்டியே எம்முடன் தொடர்புகளை மேற்கொள்ளவும்.


பார்ப்போம் - உரையாடுவோம் - கற்போம்


இவ்வண்ணம்


பாலு மகேந்திரா நூலக நிர்வாகம்

News & Event