நண்பனின் வீடு எங்கே?
பாலு மகேந்திரா நூலகத்தின் இவ்வாரத் திரையிடல் மற்றும் கலந்துரையாடலுக்காகத் தேர்வு செய்யப்பட்டுள்ள திரைப்படம் “Where is my friend's home?” [10].
அப்பாஸ் கியரோஸ்டாமி (Abbas Kiarostami) இயக்கத்தில் 1987 ஆம் ஆண்டு வெளியான ஈரானியத் திரைபடம் நண்பனின் வீடு எங்கே? (Where is my friend's home?) ஆகும்.
ஒரே வகுப்பில் கல்வி கற்கும் எட்டு வயதுடைய சிறுவன் அகமது தனது நண்பன் முகமதுவின் கொப்பியைத் தவறுதலாக எடுத்துவந்துவிடுகிறான். வீட்டுவேலை செய்யாமல் மறுநாள் பாடசாலை செல்ல நேரிட்டால் முகமது பாடசாலையில் இருந்து வெளியேற்றப்படுவான். இதனால், நண்பனின் கொப்பியைத் திரும்ப ஒப்படைப்பதற்காக அவனது வீட்டைத் தேடிப்போகும் அகமதுவின் கதையே இந்தத் திரைப்படம் ஆகும்.
சிறுவன் அகமது நண்பனின் வீட்டைத் தேடிப்போவதன் ஊடாக ஈரானிய கிராமப்புற மக்களின் வாழ்வியலையும், பாரம்பரிய நம்பிக்கைகளையும் எடுத்துரைக்கும் இந்த திரைப்படம், ஒவ்வொருவரும் பதிநான்கு வயதிற்குள் பார்க்க வேண்டிய 50 படங்களின் BFI பட்டியலில் முதல் பத்து இடங்களில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
பிரதி சனிக்கிழமை தோறும் மாலை 3 மணிமுதல் மாலை 7 மணிவரை, முதலாம் மாடி, கூட்டுறவு மண்டபம், பேருந்து தரிப்பிடச் சந்தி, கிளிநொச்சியில் அமைந்துள்ள பாலு மகேந்திரா நூலகத்தில் திரைப்படத்திரையிடல் மற்றும் கலந்துரையாடல் நடைபெற்றுவருகின்றது.
இந்த திரையிடல்களின் போது, பெரும்பாலும் சர்வதேசத் திரைப்படங்கள் மற்றும் ஈழத்துத் திரைப்படங்கள் திரையிடப்பட்டு கலந்துரையாடப்படும்.
அத்துடன், பிரத்தியேக திரையிடல்களின் போது, அத்திரைப்படத்தில் பணிபுரிந்த கலைஞர்கள் அல்லது தொழில்நுட்ப கலைஞர்களுடனான கலந்துரையாடல்களும் இடம்பெறும்.
அதேநேரம், இதுவரையில் பொது வெளியில் வெளியிடப்படாத திரைப்படங்கள் திரையிடப்படும் சந்தர்ப்பங்களில், தயாரிப்பாளர் அனுமதித்தால் மாத்திரமே இணைய வழிக் கலந்துரையாடல் திறந்துவிடப்படும்.
இத்திரையிடல்களில் அதிகப்படியாக 25 நபர்கள் மட்டுமே பங்குபற்ற முடியும் என்பதால் உங்கள் வருகைகளை முற்பதிவு செய்வது அவசியம். அத்துடன், இணைய வாயிலாக இக்கலந்துரையாடல்களில் கலந்து கொள்ள விரும்புபவர்கள், முற்கூட்டியே எம்முடன் தொடர்புகளை மேற்கொள்ளவும்.
பார்ப்போம் - உரையாடுவோம் - கற்போம்
இவ்வண்ணம்
பாலு மகேந்திரா நூலக நிர்வாகம்