கண்ணாடி

பாலு மகேந்திரா நூலகத்தின் இவ்வாரத் திரையிடல் மற்றும் கலந்துரையாடலுக்காகத் தேர்வு செய்யப்பட்டுள்ள திரைப்படம் “கண்ணாடி” [11].


ஆண்ட்ரே தர்கோவ்ஸ்கி (Andrei Tarkovsky) இயக்கத்தில் 1975 ஆம் ஆண்டு வெளியான ரஷ்ய கலைத் திரைப்படம் கண்ணாடி (The Mirror) ஆகும்.


இந்த திரைப்படம் தர்கோவ்ஸ்கியின் வாழ்வியல் அம்சங்களுடன், அவரது தந்தையான ஆர்சனி தர்கோவ்ஸ்கி (Arseny Tarkovsky) அவர்களால் எழுதப்பட்ட மற்றும் வாசிக்கப்பட்ட சில கவிதைகளாலும் ஈர்க்கப்பட்டு உருவாக்கப்பட்ட திரைப்படமாகக் காணப்படுகின்றது.


மரணப்படுக்கையில் இருக்கும் நாற்பது வயது மதிக்கத்தக்க ஒருவர், தனது சிறுவயது வாழ்க்கை, அவரது தாய், போர் மற்றும் தனது தனிப்பட்ட வாழ்க்கை என தன் கடந்த கால வாழ்வியலை நினைத்துப்பார்க்கும் கதையே இந்த கண்ணாடி திரைப்படம்.


Nonlinear முறையில் படத்தொகுப்பு செய்யப்பட்டுள்ள இந்தத் திரைப்படம் வெளியான ஆரம்ப காலத்தில் ரஷ்யாவில் பெருமளவு விமர்சனத்துக்கு உட்படுத்தப்பட்டது. இருப்பினும், பிற்பட இது எல்லாக்காலத்திலும் மிகச்சிறந்த திரைப்படங்களில் ஒன்றாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


பிரதி சனிக்கிழமை தோறும் மாலை 3 மணிமுதல் மாலை 7 மணிவரை, முதலாம் மாடி, கூட்டுறவு மண்டபம், பேருந்து தரிப்பிடச் சந்தி, கிளிநொச்சியில் அமைந்துள்ள பாலு மகேந்திரா நூலகத்தில் திரைப்படத்திரையிடல் மற்றும் கலந்துரையாடல் நடைபெற்றுவருகின்றது.


இந்த திரையிடல்களின் போது, பெரும்பாலும் சர்வதேசத் திரைப்படங்கள் மற்றும் ஈழத்துத் திரைப்படங்கள் திரையிடப்பட்டு கலந்துரையாடப்படும்.


அத்துடன், பிரத்தியேக திரையிடல்களின் போது, அத்திரைப்படத்தில் பணிபுரிந்த கலைஞர்கள் அல்லது தொழில்நுட்ப கலைஞர்களுடனான கலந்துரையாடல்களும் இடம்பெறும்.


அதேநேரம், இதுவரையில் பொது வெளியில் வெளியிடப்படாத திரைப்படங்கள் திரையிடப்படும் சந்தர்ப்பங்களில், தயாரிப்பாளர் அனுமதித்தால் மாத்திரமே இணைய வழிக் கலந்துரையாடல் திறந்துவிடப்படும்.


இத்திரையிடல்களில் அதிகப்படியாக 25 நபர்கள் மட்டுமே பங்குபற்ற முடியும் என்பதால் உங்கள் வருகைகளை முற்பதிவு செய்வது அவசியம். அத்துடன், இணைய வாயிலாக இக்கலந்துரையாடல்களில் கலந்து கொள்ள விரும்புபவர்கள், முற்கூட்டியே எம்முடன் தொடர்புகளை மேற்கொள்ளவும்.


பார்ப்போம் - உரையாடுவோம் - கற்போம்


இவ்வண்ணம்


பாலு மகேந்திரா நூலக நிர்வாகம்

News & Event