The Day I Lost My Shadow
பாலு மகேந்திரா நூலகத்தின் இவ்வாரத் திரையிடல் மற்றும் கலந்துரையாடலுக்காகத் தேர்வு செய்யப்பட்டுள்ள திரைப்படம் “The Day I Lost My Shadow” [39].
சௌதாதே காடன் (Soudade Kaadan) இயக்கத்தில் 2018 ஆம் ஆண்டு வெளிவந்த சிரியா நாட்டுத் திரைப்படமாகும்.
2012 ஆம் ஆண்டு சிரியாவில் ஒரு தாய், தன் மகனுக்காக உணவு தயார் செய்வதற்காக எரிவாயு சிலிண்டரைத் தேடி போர்ப் பகுதிக்குள் செல்லும் போது எதிர்கொள்ளும் பிரச்சினைகளை அடிப்படையாகக் கொண்டு இத் திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
இத் திரைப்படம் 2018 இல் வெனிஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டதுடன், அங்கு சிறந்த அறிமுக இயக்குனருக்கான விருதை சௌதாதே காடன் (Soudade Kaadan) வென்றமை குறிப்பிடத்தக்கது.
கொவிட்-19 இடர்காலத்தில் எம்மிடம் இருந்த OTT தளங்களில் காணப்படும் திரைப்படங்களைப் பார்வையிடும் வசதி செய்து கொடுக்கப்பட்டிருந்ததுடன், கலந்துரையாடல்கள் இணைய வாயிலாக மாத்திரமே நடைபெற்றிருந்தது. தற்போது காணப்படும் சுமூக நிலைமை காரணமாக திரையிடல்களை வழமைபோன்று எமது நூலகத்தில் நடாத்தத் திட்டமிட்டுள்ளோம்.
அதன்படி, பிரதி சனிக்கிழமை தோறும் மாலை 3 மணிமுதல் 7 மணிவரை, முதலாம் மாடி, கூட்டுறவு மண்டபம், பேருந்து தரிப்பிடச் சந்தி, கிளிநொச்சியில் அமைந்துள்ள பாலு மகேந்திரா நூலகத்தில் திரைப்படத் திரையிடல் மற்றும் கலந்துரையாடல் நடைபெறும்.
இந்த திரையிடல்களின் போது, பெரும்பாலும் சர்வதேசத் திரைப்படங்கள் மற்றும் ஈழத்துத் திரைப்படங்கள் திரையிடப்பட்டு கலந்துரையாடப்படும்.
அத்துடன், பிரத்தியேக திரையிடல்களின் போது, அத்திரைப்படத்தில் பணிபுரிந்த கலைஞர்கள் அல்லது தொழில்நுட்ப கலைஞர்களுடனான கலந்துரையாடல்களும் இடம்பெறும்.
அதேநேரம், இதுவரையில் பொது வெளியில் வெளியிடப்படாத திரைப்படங்கள் திரையிடப்படும் சந்தர்ப்பங்களில், தயாரிப்பாளர் அனுமதித்தால் மாத்திரமே இணைய வழிக் கலந்துரையாடல் திறந்துவிடப்படும்.
இத்திரையிடல்களில் அதிகப்படியாக 25 நபர்கள் மட்டுமே பங்குபற்ற முடியும் என்பதால் உங்கள் வருகைகளை முற்பதிவு செய்வது அவசியம். அத்துடன், இணைய வாயிலாக இக்கலந்துரையாடல்களில் கலந்து கொள்ள விரும்புபவர்கள், முற்கூட்டியே எம்முடன் தொடர்புகளை மேற்கொள்ளவும்.
பார்ப்போம் - உரையாடுவோம் - கற்போம்
இவ்வண்ணம்
பாலு மகேந்திரா நூலக நிர்வாகம்
13/11/2021