Miracle in Cell No. 7
பாலு மகேந்திரா நூலகத்தின் இவ்வாரத் திரையிடல் மற்றும் கலந்துரையாடலுக்காகத் தேர்வு செய்யப்பட்டுள்ள திரைப்படம் “Miracle in Cell No. 7” [05].
மெஹ்மத் அடா ஓஸ்டெக்கின் (Mehmet Ada Öztekin) என்பவரின் இயக்கத்தில் 2019 ஆம் ஆண்டு வெளியான துருக்கி நாட்டுத் திரைப்படம் Miracle in Cell No. 7 ஆகும்.
இது, 2013 இல் வெளியான தென்கொரிய நாட்டு நகைச்சுவைத் திரைப்படமான Miracle in Cell No. 7 என்ற திரைப்படத்தை தழுவி, கதைக்களம், கதாபாத்திரங்கள் என்பவற்றில் மாற்றங்களுடன் உருவாக்கப்பட்டுள்ள திரைப்படமாகும்.
கொலைக் குற்றச்சாட்டின் பேரில் சிறையில் அடைக்கப்படும் மனநலம் பாதிக்கப்பட்ட தந்தைக்கும், அவரது அழகான ஆறு வயது மகளுக்கும் இடையிலான பாசப்பிணைப்பை கதைக் கருவாகக் கொண்ட இந்தத் திரைப்படம், 93 ஆவது ஒஸ்கார் விருது விழாவில் சிறந்த சர்வதேசத் திரைப்படத்திற்கான துருக்கிய நாட்டின் நுழைவாகத் தேர்வுசெய்யப்பட்டிருந்த போதிலும், பின்னர் இந்தத் திரைப்படம் பரிந்துரை செய்யப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிரதி சனிக்கிழமை தோறும் மாலை 3 மணிமுதல் மாலை 7 மணிவரை, முதலாம் மாடி, கூட்டுறவு மண்டபம், பேருந்து தரிப்பிடச் சந்தி, கிளிநொச்சியில் அமைந்துள்ள பாலு மகேந்திரா நூலகத்தில் திரைப்படத்திரையிடல் மற்றும் கலந்துரையாடல் நடைபெற்றுவருகின்றது.
இந்த திரையிடல்களின் போது, பெரும்பாலும் சர்வதேசத் திரைப்படங்கள் மற்றும் ஈழத்துத் திரைப்படங்கள் திரையிடப்பட்டு கலந்துரையாடப்படும்.
அத்துடன், பிரத்தியேக திரையிடல்களின் போது, அத்திரைப்படத்தில் பணிபுரிந்த கலைஞர்கள் அல்லது தொழில்நுட்ப கலைஞர்களுடனான கலந்துரையாடல்களும் இடம்பெறும்.
அதேநேரம், இதுவரையில் பொது வெளியில் வெளியிடப்படாத திரைப்படங்கள் திரையிடப்படும் சந்தர்ப்பங்களில், தயாரிப்பாளர் அனுமதித்தால் மாத்திரமே இணைய வழிக் கலந்துரையாடல் திறந்துவிடப்படும்.
இத்திரையிடல்களில் அதிகப்படியாக 25 நபர்கள் மட்டுமே பங்குபற்ற முடியும் என்பதால் உங்கள் வருகைகளை முற்பதிவு செய்வது அவசியம். அத்துடன், இணைய வாயிலாக இக்கலந்துரையாடல்களில் கலந்து கொள்ள விரும்புபவர்கள், முற்கூட்டியே எம்முடன் தொடர்புகளை மேற்கொள்ளவும்.
பார்ப்போம் - உரையாடுவோம் - கற்போம்
இவ்வண்ணம்
பாலு மகேந்திரா நூலக நிர்வாகம்