City of God

பாலு மகேந்திரா நூலகத்தின் இவ்வாரத் திரையிடல் மற்றும் கலந்துரையாடலுக்காகத் தேர்வு செய்யப்பட்டுள்ள திரைப்படம் “City of God” [06].


பெர்னாண்டோ மெய்ரெல்லெஸ் (Fernando Meirelles) மற்றும் கெட்டியா லண்ட் (Kátia Lund) ஆகியோரின் இணை இயக்கத்தில் 2002 ஆம் ஆண்டு வெளிவந்த பிறேசில் நாட்டுத் திரைப்படம் City of God ஆகும்.


இந்தத் திரைப்படத்தின் கதை பௌலோ லின்ஸ் (Paulo Lins) என்பவரால் எழுதப்பட்ட City of God என்ற நாவலைத்தழுவி, அத்துடன் உண்மைச் சம்பவங்களையும் இணைத்து எழுதப்பட்டுள்ளது.


புகைப்படக் கலைஞன் மற்றும் kingpin ஆக வேண்டும் என்ற கனவுடன் ரியோவின் சேரிகளில் வசிக்கும் இரண்டு சிறுவர்களின் வாழ்க்கைப் பாதை மாறியதால் ஏற்படும் விளைவுகளைக் கூறும் கதைக்களைத்தைக் கொண்ட இந்த திரைப்படத்தில், நடித்துள்ள அதிகளவான நடிகர்கள் விடிகல் (Vidigal) மற்றும் சிடேட் டி டியஸ் (Cidade de Deus) போன்ற ஃபாவேலாக்களில் (favelas) வசிப்பவர்கள். ஃபாவேலாக்கள் என்பது பிறேசிலில் உள்ள சேரிக் குடியிருப்புகளைக் குறிக்கும்.


இந்தத் திரைப்படமானது, 76 ஆவது ஒஸ்கார் விருது விழாவில் சிறந்த ஒளிப்பதிவு (Best Cinematography), சிறந்த இயக்குனர் (Best Director), சிறந்த படத்தொகுப்பு (Best Film Editing), மற்றும் சிறந்த தழுவல் திரைக்கதை (Best Adapted Screenplay) ஆகிய பிரிவுகளில் விருதுகளுக்காக பரிந்துரைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


பிரதி சனிக்கிழமை தோறும் மாலை 3 மணிமுதல் மாலை 7 மணிவரை, முதலாம் மாடி, கூட்டுறவு மண்டபம், பேருந்து தரிப்பிடச் சந்தி, கிளிநொச்சியில் அமைந்துள்ள பாலு மகேந்திரா நூலகத்தில் திரைப்படத்திரையிடல் மற்றும் கலந்துரையாடல் நடைபெற்றுவருகின்றது.


இந்த திரையிடல்களின் போது, பெரும்பாலும் சர்வதேசத் திரைப்படங்கள் மற்றும் ஈழத்துத் திரைப்படங்கள் திரையிடப்பட்டு கலந்துரையாடப்படும்.


அத்துடன், பிரத்தியேக திரையிடல்களின் போது, அத்திரைப்படத்தில் பணிபுரிந்த கலைஞர்கள் அல்லது தொழில்நுட்ப கலைஞர்களுடனான கலந்துரையாடல்களும் இடம்பெறும்.


அதேநேரம், இதுவரையில் பொது வெளியில் வெளியிடப்படாத திரைப்படங்கள் திரையிடப்படும் சந்தர்ப்பங்களில், தயாரிப்பாளர் அனுமதித்தால் மாத்திரமே இணைய வழிக் கலந்துரையாடல் திறந்துவிடப்படும்.


இத்திரையிடல்களில் அதிகப்படியாக 25 நபர்கள் மட்டுமே பங்குபற்ற முடியும் என்பதால் உங்கள் வருகைகளை முற்பதிவு செய்வது அவசியம். அத்துடன், இணைய வாயிலாக இக்கலந்துரையாடல்களில் கலந்து கொள்ள விரும்புபவர்கள், முற்கூட்டியே எம்முடன் தொடர்புகளை மேற்கொள்ளவும்.


பார்ப்போம் - உரையாடுவோம் - கற்போம்


இவ்வண்ணம்


பாலு மகேந்திரா நூலக நிர்வாகம்

News & Event