பாதுகை

பாலு மகேந்திரா நூலகத்தின் இவ்வார வாசிப்பும் உரையாடலும் பகுதிக்காகத் தெரிவு செய்யப்பட்டுள்ள நூல், டொமினிக் ஜீவாவின் “பாதுகை”.

டொமினிக் ஜீவா என்பதை விட, ‘மல்லிகை ஜீவா’ என்ற பெயரால் பலராலும் அறியப்பட்ட இவர், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். யாழ்ப்பாணத்தில் சாதிய ஒடுக்கு முறைகள் அதிகமாக இருந்த காலகட்டத்தில் தான் இவர் பிறந்தார். ஆலய நுழைவு, தேனீர்க் கடை நுழைவு போன்ற அடிப்படை உரிமைகள் யாழ்ப்பாணத்தில் பஞ்சமர் எனப்பட்ட மக்களுக்கு மறுக்கப்பட்டிருந்தது. இத்தகைய கொடுமைகளை ஜீவாவும் எதிர்கொண்டார்.

இதனால், தனது பாடசாலைக் கல்வியை இடைநிறுத்திவிட்டு, தனது தந்தையின் முடி திருத்தும் கடையில் வேலை செய்யத் தொடங்கினார். அங்கிருந்தே அவரது வாசிப்பு ஆரம்பமானது. கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்ட இவர், ஒடுக்கப்பட்ட மக்கள் மற்றும் சாதிய கொடுமைகளுக்கு எதிராக எழுத ஆரம்பித்தார்.

இவரது படைப்புகளில் ‘தண்ணீரும் கண்ணீரும், பாதுகை, சாலையின் திருப்பம், வாழ்வின் தரிசனங்கள், டொமினிக் ஜீவா சிறுகதைகள், அனுபவ முத்திரைகள், முப்பெரும் தலைநகரில் முப்பது நாட்கள்’ போன்றன மக்கள் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்றன.

சிறுகதைகள் மட்டுமல்லாது, கட்டுரைகளையும் எழுதியுள்ள ஜீவா, 1966 ஆம் ஆண்டு ‘மல்லிகை’ இதழை வெளியிடத் தொடங்கினார். இதன் மூலம் ஈழ இலக்கிய வரலாற்றில் பல எழுத்தாளர்களை உருவாக்கியதுடன், ஈழத்தையும் தாண்டி பல எழுத்தாளர்களுக்கும் வாய்ப்பினை வழங்கினார். இவ்வாறாக, 401 மல்லிகை இதழ்கள் வெளிவந்துள்ளமை ஜீவாவின் இலக்கியச் சேவைக்கு உன்னத சான்றாகும்.

ஜீவாவின் சுய வரலாற்று தொகுப்பாக வெளிவந்த ‘எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம்’ என்ற நூல், இவரது நூல்களில் முக்கியமானதொன்றாகும். அத்துடன், இவரது ‘தண்ணீரும் கண்ணீரும்’ என்ற நூல் சாகித்திய மண்டல பரிசு பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

மல்லிகை இதழின் ஆசிரியர் டொமினிக் ஜீவா அவர்களின் எழுத்தில் உருவான ‘பாதுகை’ நூல் பற்றிய கருத்துக்களைப் பகிர்ந்துகொள்வதற்காக இணைகின்றார் பேராதனைப் பல்கலைக்கழக தமிழ் துறைத் தலைவரும், விருவுரையாளருமான ஸ்ரீவரதராஜன் பிரசாந்தன்.

பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் மாலை 5 மணி முதல் 8 மணி வரை, முதலாம் மாடி, கூட்டுறவு மண்டபம், பேருந்து தரிப்பிடச் சந்தி, கிளிநொச்சியில் அமைந்துள்ள பாலு மகேந்திரா நூலகத்தில் வாசிப்பும் உரையாடலும் நடைபெறும்.


இதில் அதிகப்படியாக 25 நபர்கள் மட்டுமே பங்குபற்ற முடியும் என்பதால் உங்கள் வருகைகளை முற்பதிவு செய்வது அவசியம்.


இணைய வாயிலாக இக் கலந்துரையாடல்களில் கலந்து கொள்ள விரும்புபவர்கள், முற்கூட்டியே எம்முடன் தொடர்பு கொள்ளவும்.

வாசிப்போம் - உரையாடுவோம் - கற்போம்



இவ்வண்ணம்


பாலு மகேந்திரா நூலக நிர்வாகம்

News & Event