தண்ணீர்

பாலு மகேந்திரா நூலகத்தின் இவ்வார வாசிப்பும் உரையாடலும் பகுதிக்காகத் தெரிவு செய்யப்பட்டுள்ள நூல், எழுத்தாளர் கே.டானியலின் “ தண்ணீர்”.

ஈழ இலக்கியத்தின் முன்னோடியாகத் திகழ்ந்த யாழ்ப்பாணம், ஆனைக்கோட்டையைச் சேர்ந்த கே.டானியல் அவர்கள், தலித் இலக்கியத்தின் மூலம் அறியப்பட்டார். சாதியத்துக்கு எதிரான கருத்துக்களை தனது எழுத்துக்களின் மூலம் வலியுறுத்திய இவர், தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்வியலைக் கருப்பொருளாகக் கொண்டு இலக்கியங்களைப் படைத்தவர்.

மக்களுக்கு வழிகாட்டும் போராட்ட இலக்கியங்களைப் படைக்க வேண்டும் என்ற ஆவல் கொண்ட கே.டானியல், “மக்களிடமிருந்து மக்களுக்கு மக்கள் மொழியில்” என்பதைத் தாரக மந்திரமாகக் கொண்டு நாவல்கள், சிறுகதைகள், குறுநாவல்கள் போன்றவற்றை எழுத்தியுள்ளார்.

இவரது நாவல்களில் ‘பஞ்சமர், கானல், அடிமைகள், தண்ணீர், கோவிந்தன்’ போன்றன வாசகர் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றன. இவற்றுடன், ‘பூமரங்கள், முருங்கை இலைக் கஞ்சி, மையக்குறி, சொக்கட்டான், இருளின் கதிர்கள், சா நிழல்’ போன்ற குறு நாவல்களும் ‘திருநாள், தாளுண்ட நீர், தெய்வ பரம்பரை, மானம்’ போன்ற சிறுகதைகளும் இவரது எழுத்தில் உருவான படைபுகளாகும்.

இவரது கதைகளைப் படிப்பதன் ஊடாக, யாழ்ப்பாண மக்களின் கலாசாரம், பண்பாடு மற்றும் சடங்குகளையும் தற்போதைய இளைய தலைமுறையினர் அறியக்கூடியதாக இருக்கின்றது.

இவ்வாறாக, ஈழ இலக்கியத்துறையில் தனக்கென தனித்துவமான இடத்தைப் பிடித்துக்கொண்டுள்ள முன்னோடியான கே.டானியலின் ‘தண்ணீர்’ நாவல் பற்றிய கருத்துக்களையும், அனுபவங்களையும் பகிர்ந்துகொள்வதற்காக ஈழத்துத் தமிழிலக்கிய அரசியல் ஆய்வாளர் ந.இரவீந்திரன், எழுத்தாளர் வள்ளியம்மை சுப்பிரமணியம், கவிதைத் தொகுப்பாளரும் கட்டுரை ஆய்வாளருமான சு.தவச்செல்வன், எழுத்தாளர் சி.கா.செந்திவேல், மற்றும் எழுத்தாளர் கருணாகரன் ஆகியோர் இணைந்து கொள்ளவுள்ளனர்.

பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் மாலை 5 மணி முதல் 8 மணி வரை, முதலாம் மாடி, கூட்டுறவு மண்டபம், பேருந்து தரிப்பிடச் சந்தி, கிளிநொச்சியில் அமைந்துள்ள பாலு மகேந்திரா நூலகத்தில் வாசிப்பும் உரையாடலும் நடைபெறும்.

இதில் அதிகப்படியாக 25 நபர்கள் மட்டுமே பங்குபற்ற முடியும் என்பதால் உங்கள் வருகைகளை முற்பதிவு செய்வது அவசியம்.

இணைய வாயிலாக இக் கலந்துரையாடல்களில் கலந்து கொள்ள விரும்புபவர்கள், முற்கூட்டியே எம்முடன் தொடர்பு கொள்ளவும்.

வாசிப்போம் - உரையாடுவோம் - கற்போம்


இவ்வண்ணம்


பாலு மகேந்திரா நூலக நிர்வாகம்

News & Event