ஒப்பாரிக்கோச்சி
பாலு மகேந்திரா நூலகத்தின் இவ்வார வாசிப்பும் உரையாடலும் பகுதிக்காகத் தெரிவு செய்யப்பட்டுள்ள நூல், எழுத்தாளர் மு.சிவலிங்கத்தின் “ஒப்பாரிக்கோச்சி”.
மலையகத்தைச் சேர்ந்த எழுத்தாளரும், அரசியல்வாதியுமான மு.சிவலிங்கம், பல சிறுகதைகள், நாவல்கள் மற்றும் ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். மலைய மக்களின் அடிப்படை உரிமைகள், நிலத்தை விட்டு வெளியேற்றுதல் மற்றும் சம்பள உயர்வுக் கோரிக்கைகள் போன்ற மலையக மக்களின் தார்மீக உரிமைகளை இவரது எழுத்துக்களில் காணமுடியும்.
‘ஒப்பாரிக்கோச்சி, மலைகளின் மக்கள், ஒரு விதை நெல், வெந்து தணிந்தது காலம்’ போன்ற சிறுகதைத் தொகுப்புகள், ‘பஞ்சம் பிழைக்க வந்த சீமை, உயிர்’ போன்ற நாவல்கள், ‘மலையகத் தமிழர் நாட்டுப்புறப் பாடல்கள்’ என்ற ஆய்வு நூல் போன்றன இவரது எழுத்துக்களில் உருவான படைப்புகள் ஆகும். இவற்றுடன், ‘தேயிலை தேசம்’ என்ற மொழிபெயர்ப்பு நூலையும் வெளியிட்டுள்ளார்.
இவ்வாறாக, மலையக மக்களிடையே தனக்கென தனியிடத்தைப் பிடித்துக்கொண்டுள்ள எழுத்தாளர் மு. சிவலிங்கம் அவர்கள், தனது ‘ஒப்பாரிக்கோச்சி’ நூல் பற்றிய கருத்துக்களையும், அனுபவங்களையும் பகிர்ந்து கொள்வதற்காக பாலு மகேந்திரா நூலகத்தின் வாசிப்பும் உரையாடலும் பகுதியூடாக இணைகின்றார்.
பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் மாலை 5 மணி முதல் 8 மணி வரை, முதலாம் மாடி, கூட்டுறவு மண்டபம், பேருந்து தரிப்பிடச் சந்தி, கிளிநொச்சியில் அமைந்துள்ள பாலு மகேந்திரா நூலகத்தில் வாசிப்பும் உரையாடலும் நடைபெறும்.
இதில் அதிகப்படியாக 25 நபர்கள் மட்டுமே பங்குபற்ற முடியும் என்பதால் உங்கள் வருகைகளை முற்பதிவு செய்வது அவசியம்.
இணைய வாயிலாக இக் கலந்துரையாடல்களில் கலந்து கொள்ள விரும்புபவர்கள், முற்கூட்டியே எம்முடன் தொடர்பு கொள்ளவும்.
வாசிப்போம் - உரையாடுவோம் - கற்போம்
இவ்வண்ணம்
பாலு மகேந்திரா நூலக நிர்வாகம்