அழுவதற்கு நேரமில்லை
பாலு மகேந்திரா நூலகத்தின் இவ்வார வாசிப்பும் உரையாடலும் பகுதிக்காகத் தெரிவு செய்யப்பட்டுள்ள நூல், எழுத்தாளர் தாமரைச்செல்வியின் “அழுவதற்கு நேரமில்லை”.
கிளிநொச்சி, பரந்தனைச் சேர்ந்த தாமரைச்செல்வி அவர்கள், 1973 களில் வானொலிக்கு எழுதுவதன் ஊடாக எழுத்துத்துறைக்குள் காலடியெடுத்து வைத்தவர். வீரகேசரி பத்திரிகையில் பிரசுமான “ஒரு கோபுரம் சரிகின்றது” என்ற இவரது முதல் சிறுகதையைத் தொடர்ந்து, இருநூறுக்கு மேற்பட்ட சிறுகதைகள், மூன்று குறு நாவல்கள், ஏழு நாவல்கள் என பல படைப்புக்களை எழுதியுள்ளார்.
அவற்றில், ‘சுமைகள், விண்ணில் அல்ல விடிவெள்ளி, தாகம், வீதியெல்லாம் தோரணங்கள், பச்சை வயல் கனவு, உயிர் வாசம்’ போன்ற நாவல்களும், ‘வேள்வித்தீ’ குறுநாவலும், ‘ஒரு மழைக்கால இரவு, அழுவதற்கு நேரமில்லை, வன்னியாச்சி’ போன்ற சிறுகதை தொகுப்புகளுமே நூலாக அச்சிட்டு வெளிவந்துள்ளன.
இவரது சிறுகதைகள் சில சிங்களத்தில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளதுடன், சில குறும்படங்களாகவும் வெளிவந்துள்ளன. குறிப்பாக, இவரது ‘இடைவெளி’ என்ற சிறுகதை இயக்குனர் மகேந்திரன் அவர்களால் குறும்படமாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு, தனது எழுத்துக்களில் பல படைப்புக்களை வெளியிட்டுள்ள எழுத்தாளர் தாமரைச்செல்வி அவர்கள், தனது படைப்புகளில் ஒன்றான ‘அழுவதற்கு நேரமில்லை’ என்ற நூல் பற்றிய கருத்துக்களையும், அனுபவங்களையும் பகிர்ந்து கொள்வதற்காக பாலு மகேந்திரா நூலகத்தின் வாசிப்பும் உரையாடலும் பகுதியுடன் இணைகின்றார்.
பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் மாலை 5 மணி முதல் 8 மணி வரை, முதலாம் மாடி, கூட்டுறவு மண்டபம், பேருந்து தரிப்பிடச் சந்தி, கிளிநொச்சியில் அமைந்துள்ள பாலு மகேந்திரா நூலகத்தில் வாசிப்பும் உரையாடலும் நடைபெறும்.
இதில் அதிகப்படியாக 25 நபர்கள் மட்டுமே பங்குபற்ற முடியும் என்பதால் உங்கள் வருகைகளை முற்பதிவு செய்வது அவசியம்.
இணைய வாயிலாக இக் கலந்துரையாடல்களில் கலந்து கொள்ள விரும்புபவர்கள், முற்கூட்டியே எம்முடன் தொடர்பு கொள்ளவும்.
வாசிப்போம் - உரையாடுவோம் - கற்போம்
இவ்வண்ணம்
பாலு மகேந்திரா நூலக நிர்வாகம்