Two Days, One Night

பாலு மகேந்திரா நூலகத்தின் இவ்வாரத் திரையிடல் மற்றும் கலந்துரையாடலுக்காகத் தேர்வு செய்யப்பட்டுள்ள திரைப்படம் “Two Days, One Night” [07].


லூக் டார்டன் (Luc Dardenne) மற்றும் ஜீன்-பியர் டார்டன் (Jean-Pierre Dardenne) ஆகிய சகோதரர்களின் இயக்கத்தில் 2014 ஆம் ஆண்டு வெளிவந்த பெல்ஜிய நாட்டுத் திரைப்படமே இரண்டு பகல்கள், ஒரு இரவு (Two Days, One Night) ஆகும்.


ஒரு தொழிற்சாலை தொழிலாளியான சாண்ட்ரா பணியிலிருந்து நீக்கப்படுவதுடன், அவளது சக பணியாளர்களுக்கு 1,000 யூரோக்கள் வோணஸாக வழங்கப்படுகிறது. தனது வேலையைத் தக்கவைத்துக் கொள்வதற்காக சக பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட வோணஸை விட்டுவிட சம்மதிக்க வைக்க சாண்ட்ரா படும் பாடுகளே இந்தத் திரைப்படத்தின் கதையாகும்.


2014 இல் இந்த திரைப்படம் Cannes திரைப்படவிழாவில் Palme d'Or விருதுக்காகப் போட்டியிட்டதுடன், 87 ஆவது ஒஸ்கார் விருது விழாவில் சிறந்த சர்வதேச திரைப்படம் என்ற பிரிவில் பெல்ஜிய நாட்டின் நுழைவாகத் தேர்வுசெய்யப்பட்டிருந்த போதிலும், பின்னர் இந்தத் திரைப்படம் பரிந்துரை செய்யப்படவில்லை.


மேலும், இந்தத் திரைப்படத்தின் முதன்மைக் கதாபாத்திரமாக நடித்த மரியன் கோட்டிலார்ட் (Marion Cotillard) சிறந்த நடிகை என்ற பிரிவில் பரிந்துரைக்கப்பட்டதைத் தொடர்ந்து, பெல்ஜியம் சார்பாக பரிந்துரைக்கப்பட்ட முதல் நடிகை இவராவார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


பிரதி சனிக்கிழமை தோறும் மாலை 3 மணிமுதல் மாலை 7 மணிவரை, முதலாம் மாடி, கூட்டுறவு மண்டபம், பேருந்து தரிப்பிடச் சந்தி, கிளிநொச்சியில் அமைந்துள்ள பாலு மகேந்திரா நூலகத்தில் திரைப்படத்திரையிடல் மற்றும் கலந்துரையாடல் நடைபெற்றுவருகின்றது.


இந்த திரையிடல்களின் போது, பெரும்பாலும் சர்வதேசத் திரைப்படங்கள் மற்றும் ஈழத்துத் திரைப்படங்கள் திரையிடப்பட்டு கலந்துரையாடப்படும்.


அத்துடன், பிரத்தியேக திரையிடல்களின் போது, அத்திரைப்படத்தில் பணிபுரிந்த கலைஞர்கள் அல்லது தொழில்நுட்ப கலைஞர்களுடனான கலந்துரையாடல்களும் இடம்பெறும்.


அதேநேரம், இதுவரையில் பொது வெளியில் வெளியிடப்படாத திரைப்படங்கள் திரையிடப்படும் சந்தர்ப்பங்களில், தயாரிப்பாளர் அனுமதித்தால் மாத்திரமே இணைய வழிக் கலந்துரையாடல் திறந்துவிடப்படும்.


இத்திரையிடல்களில் அதிகப்படியாக 25 நபர்கள் மட்டுமே பங்குபற்ற முடியும் என்பதால் உங்கள் வருகைகளை முற்பதிவு செய்வது அவசியம். அத்துடன், இணைய வாயிலாக இக்கலந்துரையாடல்களில் கலந்து கொள்ள விரும்புபவர்கள், முற்கூட்டியே எம்முடன் தொடர்புகளை மேற்கொள்ளவும்.


பார்ப்போம் - உரையாடுவோம் - கற்போம்


இவ்வண்ணம்


பாலு மகேந்திரா நூலக நிர்வாகம்

News & Event