காற்றைப் பயன்படுத்திய சிறுவன்
பாலு மகேந்திரா நூலகத்தின் இவ்வாரத் திரையிடல் மற்றும் கலந்துரையாடலுக்காகத் தேர்வு செய்யப்பட்டுள்ள திரைப்படம் “காற்றைப் பயன்படுத்திய சிறுவன்”(The boy who harnessed the wind).
கொவிட்-19 நிலைமையைக் கருத்தில் கொண்டு பாலு மகேந்திரா நூலகத்தின் ஒரு வருட முழுநேர முதுநிலைக் கற்கைநெறியினைத் தொடரும் மாணவர்களுக்கு மாத்திரமே இவ்வாரத் திரையிடலில் பங்குபற்றுவதற்கான OTT(Netflix) வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
கொவிட்-19 இடர்காலம் முடியும் வரை எம்மிடம் உள்ள OTT தளங்களில் காணப்படும் திரைப்படங்களை மாத்திரமே திரையிடத் தீர்மானித்துள்ளோம்.
சிவெட்டல் எஜியோஃபர் (Chiwetel Ejiofor) இயக்கத்தில் 2019 ஆம் ஆண்டு வெளியான மலாவி நாட்டுத் திரைப்படம் The boy who harnessed the wind ஆகும். வில்லியம் காம்கவாம்பா (William Kamkwamba) மற்றும் பிரையன் மீலர் (Bryan Mealer) ஆகியோரின் நினைவுக் குறிப்பை அடிப்படையாகக் கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது.
இத்திரைப்படம் “மலாவியில் உள்ள பதின்மூன்று வயது சிறுவன் முரண்பாடுகளுக்கு மத்தியில் தனது குடும்பத்தையும் கிராமத்தையும் பஞ்சத்திலிருந்து காப்பாற்ற எவ்வாறான வழியைக் கண்டுபிடித்தான்.” என்பதைக் கதைக்கருவாகக் கொண்டது.
இந்த படம் 2019 சன்டான்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டதுடன், 92 ஆவது ஒஸ்கர் விருது விழாவில் சிறந்த சர்வதேச திரைப்படத்திற்கான அகடமி விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
பிரதி சனிக்கிழமை தோறும் மாலை 3 மணிமுதல் மாலை 7 மணிவரை, முதலாம் மாடி, கூட்டுறவு மண்டபம், பேருந்து தரிப்பிடச் சந்தி, கிளிநொச்சியில் அமைந்துள்ள பாலு மகேந்திரா நூலகத்தில் திரைப்படத்திரையிடல் மற்றும் கலந்துரையாடல் நடைபெற்றுவருகின்றமை நீங்கள் அறிந்ததே.. கொவிட்-19 இடர்காலம் முடிந்ததும் மீண்டும் வழமைபோல் திரையிடல்கள் எமது நூலகத்தில் இடம்பெறும்.
பார்ப்போம் - உரையாடுவோம் - கற்போம்
இவ்வண்ணம்
பாலு மகேந்திரா நூலக நிர்வாகம்
30.06.2021