சிறுகதைப் போட்டி முடிவுகள் மற்றும் 2 ஆம் ஆண்டு ஆரம்ப விழா நிகழ்வு பற்றிய அறிக்கை
பாலு மகேந்திரா நூலகம் மற்றும் கற்கை வள நிலையத்தின் இரண்டாம் ஆண்டு ஆரம்ப விழா நிகழ்வு மற்றும் பாலு மகேந்திரா நூலகத்தின் முதலாம் ஆண்டு நிறைவையொட்டி எம்மால் நடாத்தப்பட்ட சிறுகதைப் போட்டியின் முடிவுகள் அறிவிப்பு ஆகியவை, நேற்றைய தினம் (26.09.2021) மாலை 6 மணி முதல் 8:30 மணி வரை இணைய வாயிலாக இனிதாக நடைபெற்றது.
இந்நிகழ்வினைப் பிரபல வானொலி ஒலிபரப்பாளர் எஸ்.கே.ராஜென் அவர்கள் சிறப்புற தொகுத்து வழங்கினார்.
அக வணக்கத்துடன் ஆரம்பமான நிகழ்வில், ஈழத்தின் புகழ் பூத்த பாடகர், பாடலாசிரியர் மற்றும் இசையமைப்பாளர் என பன்முக ஆளுமை கொண்ட வர்ண ராமேஸ்வரன் அவர்களிற்காக சிறப்பு நினைவு கூறல் இடம்பெற்றது.
அடுத்ததாக, பல சுயாதீனப் பாடல்களைப் பாடியுள்ளவரும், சீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஸரிகமப நிகழ்ச்சிக்கு ஈழத்திலிருந்து தெரிவாகியிருப்பவருமான கிளிநொச்சியைச் சேர்ந்த கில்மிஷா உதயசீலன் அவர்களின் தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்வு ஆரம்பமாகியது.
தொடர்ந்து, பட்டறை -2 மாணவியும், பாலு மகேந்திரா நூலக நிர்வாகக் குழு உறுப்பினர்களில் ஒருவருமான திருகோணமலையைச் சேர்ந்த சகீனா இஷ்மாயில் வரவேற்புரையை நிகழ்த்தினார்.
வரவேற்புரையை அடுத்து, பட்டறை - 2 மாணவியும், பாலு மகேந்திரா நூலக நிர்வாகச் செயலாளருமான ஒட்டுசுட்டான், முல்லைத்தீவைச் சேர்ந்த கம்ஜினி ஜனார்த்தன் அவர்கள் பாலு மகேந்திரா நூலகத்தின் கடந்த ஒரு வருட செயற்பாடுகள் பற்றிய விரிவான முன்னளிக்கையை வழங்கினார்.
தொடர்ந்து, பட்டறை - 2 முதல் இன்று வரை எம்முடன் வெளிவாரி மாணவனாக இணைந்து பயணித்துக்கொண்டிருக்கும், தற்போது கனடாவில் மேற்படிப்பை தொடர்ந்து வருவதுடன், மென்பொருள் பொறியியலாளராக பணியாற்றி வரும் கௌதம் மாறன் அவர்கள் பாலு மகேந்திரா நூலக வெளிவாரி கற்கை சார்ந்த தனது அனுபவத்தினைப் பகிர்ந்து கொண்டார்.
1973 தொடக்கம் இருநூறுக்கு மேற்பட்ட சிறுகதைகள், மூன்று குறு நாவல்கள், ஏழு நாவல்கள் என பல படைப்புக்களை எழுதிய, கிளிநொச்சி, பரந்தனைச் சேர்ந்தவரும், தற்போது அவுஸ்ரேலியாவில் வசிப்பவருமான எழுத்தாளர் தாமரைச்செல்வி அவர்கள் பாலு மகேந்திரா நூலகம் பற்றிய தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.
பாலு மகேந்திரா நூலகத்தினால் ஒழுங்கமைப்பட்டு பிரதி ஞாயிறு தோறும் நடைபெற்று வரும் வாசிப்பும் உரையாடலும் என்ற பகுதியில் இவரது அழுவதற்கு நேரமில்லை என்ற சிறுகதைத் தொகுப்பு வாசிப்பும் உரையாடலுக்குமாக எடுத்துக்கொள்ளப்பட்டு, அவருடனான கலந்துரையாடலும் இடம்பெற்றிருந்து. இதனையடுத்து தொடர்ச்சியாக எமது வாசிப்பும் உரையாடலிலும் பார்வையாளராக கலந்துகொள்வதுடன் மட்டுமன்றி எமக்கு உறுதுணையாகவும் இருந்து வருகிறார்.
பாலு மகேந்திரா நூலகமானது கொவிட் பெருந்தொற்றுக் காலத்தில் ஆரம்பிக்கப்பட்டிருந்த போதிலும், சவால்களையும் தாண்டி பல செயற்திட்டங்களை வெற்றிகரமாகச் செயற்படுத்தியுள்ளது. இருப்பினும் பொதுமுடக்கம் காரணமாக பல களச் செயற்பாடுகளை எம்மால் நடைமுறைப் படுத்த முடியாமல் போனதும் உண்மையே.
பாலு மகேந்திரா நூலகத்தின் நோக்கங்களில் ஒன்றான 'வெளிநாடுகளில் இருந்து திரைப்படத்துறை ஆளுமைகளை வரவழைத்து எமது மாணவர்களுக்கு கற்பிப்பது மட்டுமல்லாது, எமது மாணவர்களையும் வெளிநாடுகளுக்கு அனுப்பி திரைப்படத்துறையில் பயிற்றுவித்து, அவர்கள் தாயகம் திரும்பி எமது அடுத்த தலைமுறையினை வழிநடத்த வேண்டுமென்பதே எமது பேரவா.
அந்தவகையில், சென்ற ஆண்டு ஜேர்மனில் உள்ள Film Academy Baden-Württemberg இல் சென்று 6 மாத கால திரைப்படப் பயிற்சிகளைப் பெற்று நாடு திரும்பி, தற்போது நூலக நிர்வாக இயக்குனராகக் கடமையாற்றிக்கொண்டிருக்கும் திருகோணமலையைச் சேர்ந்த கணேசலிங்கம் பதுர்ஷன் அவர்கள், இவ் வருடம் செய்ய முடியாமல் போன செயற்றிட்டங்களுடன், அடுத்த வருடத்தில் முன்னெடுக்கப்படவுள்ள புதிய செயற்றிட்டங்கள் குறித்துமான முன்னளிக்கை ஒன்றினை வழங்கினார்.
எமது நூலகத்தால் நடாத்தப்படும் ஒருவருட முதுநிலைத் திரைப்படக் கற்கைநெறியில் முழுநேரமாகக் கல்வியைத் தொடர்ந்துகொண்டிருக்கும் மாணவனும், நூலகத்தால் பிரதி ஞாயிறு தோறும் நடாத்தப்படும் வாசிப்பும் உரையாடலும் நிகழ்வின் தொகுப்பாளருமான யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த புவனேந்திரன் நிதுர்சன் அவர்கள் ஒரு வருட முதுநிலைக் கற்கை பற்றிய தனது அனுபவத்தைப் பகிந்து கொண்டார்.
அடுத்து, பாலு மகேந்திரா நூலக மாணவர்கள் தாங்கள் உருவாக்கவிருக்கும் குறும்படங்கள் சார்ந்த தமது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்கள். அந்தவகையில் முதலில், நூலகத்தின் முதுநிலைத் திரைப்படக் கற்கை மாணவர்கள் இணைந்து 'Egg' என்ற பெயரில் உருவாக்கவிருக்கும் பயிற்சிக் குறும்படத்தின் இயக்குனர்களில் ஒருவராகிய முள்ளியவளை, முல்லைத்தீவைச் சேர்ந்த வேல்ராஜ் சோபன் அவர்கள் குறும்படம் உருவாகிக் கொண்டிருக்கும் விதம் பற்றிய தனது கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.
அதனைத் தொடர்ந்து, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மொழிபெயர்ப்புக்கற்கைகள் துறை மாணவியும், பட்டறையிலிருந்து இன்றுவரை எம்முடன் தன்னார்வலராக இணைந்து பயணிப்பவரும், நூலகத்தின் வெளிவாரி கற்கை மாணவியுமான மாத்தளையைச் சேர்ந்த சரண்யா யோகலிங்கம் அவர்கள், தான் இயக்கவிருக்கும் ‘Ceylon Tea’ குறும்படம் சார்ந்த முன்னளிக்கையினையும், நூலகத்தின் கற்கை மற்றும் தன்னார்வலராக இணைந்து பனியாற்றும் அனுபவங்கள் சார்ந்தும் கருத்துரை வழங்கினார்.
பட்டறை - 2 மாணவியும், பாலு மகேந்திரா நூலக நிர்வாகச் செயலாளருமான ஒட்டுசுட்டான், முல்லைத்தீவைச் சேர்ந்த கம்ஜினி ஜனார்த்தன் அவர்கள் தான் இயக்கவிருக்கும் “8A, 1st Period” குறுந்திரைப்படம் பற்றிய கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.
பாலு மகேந்திரா நூலகத்தின் வாரந்த திரையாடலானது பொது முடக்கத்திற்கு முன்னர் நூலக வளாகத்தில் நேரடியாகத் திரையிடப்பட்டுக்கொண்டிருந்த சந்தர்ப்பங்களில், அதிகளவான திரைப்படங்களைப் பார்வையிடுவதற்காக புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவில் இருந்து நேரடியாக வருகை தருபவரும், எமது நலன்விரும்பிகளில் ஒருவரும், ஈழத்தின் மிக முக்கியமான இயற்கை விவசாயிகளில் முதன்மையானவரும், தாயகத்தின் முதலாவது பாரம்பரிய விதை வங்கியை உருவாக்கியவர் என்ற பெருமைக்குரியவரும், தற்சார்புப் பொருளாதாரத்தில் அதிக சிரத்தை கொண்டவருமான நாகலிங்கம் கனகசபாபதிநேசன் அவர்கள், திரையிடல் மற்றும் கலந்துரையாடல் சார்ந்த தனது அனுபங்களைப் பகிர்ந்துகொண்டார்.
தொடர்ந்து, பட்டைறை - 2 இலிருந்து இன்றுவரை அனைத்து வகுப்புகளிலும் கலந்துகொண்ட மிகமுக்கியமான வெளிவாரி மாணவரும், நாடகத்துறையில் பயணித்துக்கொண்டிருப்பவரும், தற்போது வெள்ளித்திரையில் "சூ. மந்திரக்காளி" எனும் முழுநீளத் திரைப்படத்தில் கதாநாயகியின் தந்தையாகவும் நடித்திருக்கும் தாய்த் தமிழகத்தைச் சேர்ந்த வெ.சங்கர் அவர்கள் நூலகத்தால் நடாத்தப்படும் சிறப்புப் பயிற்சிப் பட்டறைகளில் கலந்துகொண்ட தனது அனுபவம் சார்ந்து கருத்துரை வழங்கினார்.
அதனையடுத்து, பாலு மகேந்திரா நூலகம் உருவாக்கம் பெற அடித்தளமாய் அமைந்த பட்டறையானது, எமது சமூகத்திலுள்ள புத்தாக்கத்திறனையும் படைப்பாற்றலையும் மேம்படுத்தும் பொருட்டு செயற்பட்டுக்கொண்டிருக்கும் சுயாதீனக் கட்டமைப்பு ஆகும். பட்டறை இரண்டு எமக்கு இந்த நூலகத்தைத் தந்தது போல, சிறுகதைப் போட்டி சம்பந்தமான செயற்பாடுகள், பெறப்பட்ட சிறுகதைகளின் தரத்தை உயர்த்துவதற்கான இணையத்துடனான பொறிமுறை மற்றும் கருத்தரங்கு பட்டறை 3 இல் நடைபெறவுள்ளது. இதன்படி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடகக்கற்கைகள் துறை மாணவியும், பட்டறை 3 இன் ஒருங்கிணைப்பாளரும், பாலு மகேந்திரா நூலக நிர்வாக உறுப்பினர்களில் ஒருவருமான குந்தவி சிவபாலன் அவர்கள் பட்டறை 3 பற்றிய முன்னளிக்கையினை வழங்கினார்.
தொடர்ச்சியாக, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடகக்கற்கைகள் துறையின் தலைவரும், பட்டறை முதல் இன்றுவரை பல செயற்பாடுகளிலும் எமக்கு ஆலோசனைகளை வழங்கி, எமது செயற்பாடுகளுக்கு ஊக்குவிப்பு வழங்கி, இன்றளவும் எம்முடன் பயணித்துக்கொண்டிருப்பவரும் எமது ஆலோசனைக் குழு உறுப்பினருமான சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி.எஸ்.ரகுராம் அவர்கள் நூலகம் பற்றிய தனது கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.
நாம் ஓராண்டு நிறைவை ஒட்டி நடாத்திய இச் சிறுகதைப் போட்டி நிகழ்விற்கு இணை ஆதரவு வழங்கிய "எங்கட புத்தகங்கள்" பதிப்பகத்தின் அதிபரான யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த குலசிங்கம் வசீகரன் அவர்கள் ஈழத்து இலக்கியத்துறை நிகழ்காலம் பற்றிய தனது பார்வையினை பகிர்ந்து கொண்டார்.
மேலும், ஈழத்து முதன்மையான எழுத்தாளர்களில் ஒருவரும், சுவிஸ் நாட்டில் வாழும் புலம்பெயர் ஈழத்தமிழ் எழுத்தாளருமான சயந்தன் அவர்கள் பிரயாணத்தில் இருந்தமையால் அவரது உரையினை எழுத்து மூலமாக அனுப்பி வைத்திருந்தார். அவரது செய்தியினை நூலக செயற்பாட்டுக்குழு உறுப்பினர்களில் ஒருவரான குந்தவி சிவபாலன் அவர்கள் வாசித்தளித்தார்.
தொடர்ந்து, பாலு மகேந்திரா நூலகத்தின் முதலாம் ஆண்டு நிறைவையொட்டி எம்மால் நடாத்தப்பட்ட சிறுகதைப் போட்டியில் ஆறுதல் பரிசு பெற்றவர்கள் விபரம் அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் ஆறுதல் பரிசு பெற்றவர்களின் விபரம்
"சாறம்" - இரத்தினம் பிரதீபன் - ஜேர்மனி
"ஒரு மிதிவண்டியின் கதை" - இராஜ ராயேஸ்வரி தங்கராசா - யாழ்ப்பாணம்
"வெண்ணிலா" - சர்மிலா வினோதினி திருநாவுக்கரசு - யாழ்ப்பாணம்
"சிரட்டை" - சுரேந்திரன் தர்சித் ராகுல் - கொழும்பு
"நீ நடந்த பாதையிலே....." - ரேணுகா செயறூபன் - வவுனியா
"யாதுமாகி...." - கீதாஞ்சலி சிங்கராசா - யாழ்ப்பாணம்
"மீளுயிர்ப்பு" - நடராசா இராமநாதன் - முல்லைத்தீவு
"கன்றுக் குட்டி" - கொ.சகாயராசா - வவுனியா
"ஒப்புதல்கள்" - மேரின் றேச்சல் - யாழ்ப்பாணம்
"முள்பாதை" - விமலாதேவி பரமநாதன் - பிரித்தானியா
அடுத்து, ஈழத்து புகழ்பூத்த எழுத்தாளர், கலைத் திறனாய்வாளர், நாடகக் கலைஞர், சமூகசிந்தனையாளர், உளவள ஆலோசகர் என பன்முக ஆளுமை கொண்டவரும் எமது சிறுகதைப் போட்டியின் நடுவர்களில் ஒருவருமான கோகிலா மகேந்திரன் அவர்கள், இணையக் கோளாறு காரணமாக சிறுகதைப் போட்டி தொடர்பான அவரது கருத்தினை எமக்கு எழுத்து வாயிலாக அனுப்பி வைத்திருந்தார். அதனை எமது நூலக நிர்வாகச் செயலாளர் கம்ஜினி ஜனார்த்தன் அவர்கள் வாசித்தார்.
தொடர்ச்சியாக, சிறுகதைப் போட்டியின் மூன்றாம் பரிசு அறிவிக்கப்பட்டு, அதன் வெற்றியாளரான "21 வருடங்கள்" சிறுகதையின் எழுத்தாளர், வத்தளையை வதிவிடமாக் கொண்ட 26 வயதுடைய சுப்பிரமணியம் மஹின் அவர்கள் தனது வெற்றியாளர் உரையினை நிகழ்த்தினார்.
அடுத்து, "மிதிபடும் காவோலைகள்" சிறுகதையின் எழுத்தாளர், வவுனியாவைச் சேர்ந்த 24 வயதுடைய நீ.நிலவிந்தன் அவர்களுக்கு சிறுகதைப் போட்டியின் இரண்டாம் பரிசு அறிவிக்கப்பட்டது.
அதேபோல, சிறுகதைப் போட்டியின் முதலாம் பரிசு அறிவிக்கப்பட்டதுடன்,
அதன் வெற்றியாளரான "சுடு மணலில் சிலை விதைகள்" சிறுகதையின் எழுத்தாளர், மட்டக்களப்பைச் சேர்ந்த 61 வயதுடைய கலாநிதி ஓ.கே குணநாதன் அவர்கள் வெற்றியாளர் உரையை நிகழ்த்தினார்.
இறுதியாக, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் ஊடகக் கற்கைகள் துறையில் உதவி விரிவுரையாளராக பணியாற்றி வருபவரும், பட்டறை காலம் தொட்டு எமது அனைத்துச் செயற்பாடுகளிலும் தோளோடு தோள்நின்று செயற்பட்டு வருபவரும், பாலு மகேந்திரா நூலக நிர்வாகக் குழு உறுப்பினருமான மாத்தளையைச் சேர்ந்த முனியப்பன் துலாபரணி அவர்களின் நன்றி உரையுடன் நிகழ்வுகள் யாவும் இனிதே நிறைவுற்றது.
வெற்றி பெற்ற அனைவருக்குமான பரிசுத்தொகை நேற்று இரவிற்குள் அனைவருக்கும் கிடைக்கும் வண்ணம் அவர்களது வங்கி இருப்பில் செலுத்தப்பட்டதுடன் அதற்கான பற்றுச்சீட்டும் அவர்களின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இவர்களில் ஜேர்மனியில் வசிக்கும் "சாறம்" எனும் சிறுகதை ஊடாக ஆறுதல் பரிசினை வென்ற இரத்தினம் பிரதீபன் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க, அவரது தந்தையின் ஞாபகார்த்தமாக தாயகத்திலுள்ள பிந்தங்கிய பாடசாலை ஒன்றின் நூலகத்திற்கு அன்பளிப்பாக வழங்கும் பொருட்டு, அவருக்கான பரிசுத்தொகை அனுப்பிவைக்கப்படாமை குறிப்பிடத்தக்கது.
இந்த சிறுகதைப் போட்டியில் கலந்து கொண்ட அனைத்து எழுத்தாளர்களுக்கும் இத்தருணத்தில் நன்றி கூறிக்கொள்வதுடன், அவர்களின் சிறுகதை விபரங்களையும் அகர வரிசையில் இங்கு இணைத்துள்ளோம்.
இவ்வண்ணம்,
நிர்வாகம்,
பாலு மகேந்திரா நூலகம் மற்றும் கற்கை வள நிலையம்.
27.09.2021