சிறுகதைப் போட்டியில் கிடைக்கப் பெற்ற சிறுகதைகள்

வணக்கம்,

பாலு மகேந்திரா நூலகத்தின் ஓராண்டு நிறைவை முன்னிட்டு, எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் பொருட்டு எம்மால் நடாத்தப்படும் இச் சிறுகதைப்போட்டி நிகழ்விற்காக தங்கள் சிறுகதைகளை அனுப்பிவைத்த அனைத்து எழுத்தாளர்களுக்கும் எமது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்வதுடன், வெற்றி பெற வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.


விண்ணப்ப முடிவுத் திகதியாகிய ஓகஸ்ட் 31ஆம் திகதி வரை எமக்கு 328 எழுத்தாளர்களுடைய மொத்தம் 443 சிறுகதைகள் கிடைக்கப்பெற்றன.


அவற்றில், 166 ஆண்கள் எழுதிய மொத்தம் 239 சிறுகதைகள், 133 பெண்கள் எழுதிய மொத்தம் 163 சிறுகதைகள், 29 இதர பால்நிலை மற்றும் பால்நிலை குறிப்பிடாதவர்கள் எழுதிய மொத்தம் 41 சிறுகதைகள் உள்ளடங்கும்.


இலங்கையில் இருந்து 160 எழுத்தாளர்கள் மொத்தம் 195 சிறுகதைகளுடனும், இந்தியாவிலிருந்து 142 எழுத்தாளர்கள் மொத்தம் 220 சிறுகதைகளுடனும் கலந்து கொண்டனர். இவர்களைத்தவிர அவுஸ்ரெலியா, கனடா, கட்டார், டுபாய், ஜெர்மனி, சுவிஸ், பிரித்தானியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலிருந்து 14 போட்டியாளர்கள் மொத்தம் 14 சிறுகதைகளுடன் கலந்து கொண்டனர். இவர்களைத்தவிர 12 நாடு குறிப்பிடாத எழுத்தாளர்கள் மொத்தம் 14 சிறுகதைகளை அனுப்பி வைத்துள்ளனர்.


எமது பிரதான நோக்கமாகிய ஈழத் திரைப்படத்துறையை மேம்படுத்துதலுக்கு வலுச்சேர்க்கும் விதமாகவே இச்சிறுகதைப் போட்டியினை ஆரம்பித்திருந்தோம். நாம் எதிர்பார்த்ததை விட அதிகமாக ஈழத்து எழுத்தாளர்கள் தங்கள் சிறுகதைகளை அனுப்பிச் சிறப்பித்திருப்பது எமது நோக்கத்திற்கு மேலும் உரமூட்டுவதுடன், அடுத்தடுத்த முயற்சிகளுக்கும் எமக்கு உந்துதலளிக்கிறது.


இவ்வாண்டிற்கான இச்சிறுகதைப் போட்டியின் நோக்கம் ஈழத்து எழுத்தாளர்களை இனங்கண்டு ஊக்குவிப்பதே. இருப்பினும் நாம் சற்றும் எதிர்பார்க்காத விதமாக தாய்த்தமிழகத்திலிருந்து பலர் ஆர்வத்துடன் தமது சிறுகதைகளை அனுப்பிவைத்துள்ளனர்.
அவர்களை மதித்து ஊக்குவிக்கும் பொருட்டு இப்போட்டியினை இரு பிரிவுகளாகப் பிரித்து நடத்தலாம் என எண்ணுகிறோம்.


1. நாம் முன்பு அறிவித்ததற்கமைய ஈழத்து எழுத்தாளர்களுக்கு ரூ 100000 பெறுமதியான பரிசில்

- முதலாம் பரிசு: 25 000 ரூபா

- இரண்டாம் பரிசு: 15 000 ரூபா

- மூன்றாம் பரிசு: 10 000 ரூபா

- 10 ஆறுதல் பரிசுகள்: ஒவ்வொரு சிறுகதைக்கும் தலா 5 000 ரூபா


2. இந்தியப் போட்டியாளர்களுக்கு

- முதலாம் பரிசு: 25 000 இலங்கை ரூபா

- இரண்டாம் பரிசு: 15 000 இலங்கை ரூபா

- மூன்றாம் பரிசு: 10 000 இலங்கை ரூபா




இந்தியப் போட்டியாளர்களிடமிருந்து கிடைக்கப்பெற்றுள்ள சிறுகதைகளை வாசித்துத் தெரிவு செய்வதற்காக நாம் தனியாக ஓர் தமிழக எழுத்தாளர் குழு ஒன்றினையும் தெரிவுசெய்துள்ளோம்.


வெற்றிபெறும் எழுத்தாளர்களைப் பாராட்டி பரிசில்கள் வழங்குதல், நடுவர்களுடனான கலந்துரையாடல் மற்றும் தெரிவு செய்யப்படும் சிறுகதைகளைத் தொகுப்பாக வெளியிடுவது பற்றிய அறிவித்தல் ஆகிய நிகழ்வுகள் எதிர்வரும் 26ம் திகதி மாலை 6 மணிமுதல் 9 மணிவரை இணையவாயிலாக நடைபெறும். இந்நிகழ்வில் கலந்துகொள்வதற்கான இணைய முகவரி பின்னர் அறியத்தரப்படும்.



இவ்வண்ணம்

நிர்வாகம்

பாலு மகேந்திரா நூலகம்

02.09.2021

News & Event