சிறுகதைப் போட்டியில் வெற்றிபெற்ற தமிழக எழுத்தாளர்களுக்கான பரிசளிப்பு விழா நிகழ்வு பற்றிய அறிக்கை
பாலு மகேந்திரா நூலகம் மற்றும் கற்கை வள நிலையத்தின் ஓராண்டு நிறைவை முன்னிட்டு, எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் பொருட்டு எம்மால் நடாத்தப்பட்ட சிறுகதைப் போட்டியில் வெற்றிபெற்ற தமிழக எழுத்தாளர்களுக்கான பரிசளிப்பு விழா நிகழ்வு 17.10.2021 அன்று தாயக நேரம் மாலை 3 மணி தொடக்கம் 5 மணி வரை இணையவாயிலாக இனிதாக நடைபெற்றிருந்தது.
இந்நிகழ்வினை எழுத்தாளர், வானொலி அறிவிப்பாளர் மற்றும் சமூக ஆர்வலரான மு.வெ.ரா அவர்கள் தொகுத்து வழங்கினார்.
நிகழ்வின் ஆரம்பத்தில் அகவணக்கம் செலுத்தப்பட்டதுடன்,அடுத்ததாக பல சுயாதீனப் பாடல்களைப் பாடியுள்ளவரும், சீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஸரிகமப நிகழ்ச்சிக்கு ஈழத்திலிருந்து தெரிவாகியிருப்பவருமான கிளிநொச்சியைச் சேர்ந்த கில்மிஷா உதயசீலன் அவர்களின் தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்வு ஆரம்பமாகியது.
தொடர்ந்து நிகழ்ச்சித்தொகுப்பாளர் மு.வெ.ரா அவர்கள் வரவேற்புரையை நிகழ்த்தினார்.
வரவேற்புரையை அடுத்து, பட்டறை - 2 மாணவியும், பாலு மகேந்திரா நூலக நிர்வாகச் செயலாளருமான ஒட்டுசுட்டான், முல்லைத்தீவைச் சேர்ந்த கம்ஜினி ஜனார்த்தன் அவர்கள் பாலு மகேந்திரா நூலகத்தின் கடந்த ஒரு வருட செயற்பாடுகள் பற்றிய விரிவான முன்னளிக்கையை வழங்கினார்.
தொடர்ந்து, தோழமை அமைப்பான நிழல் பதியத்தின் நிவுனர் திரு அரசு அவர்கள் “புத்தகமும் சினிமாவும்” எனும் தலைப்பில் சிறிய கருத்துரை ஆற்றினார்.
அதன் தொடர்ச்சியாக, பாலு மகேந்திரா நூலகத்தால் நடாத்தப்பட்ட இந்த சிறுகதை போட்டியின் நோக்கம், அதற்கு கிடைத்த வரவேற்பு மற்றும் அடுத்த கட்ட செயற்பாடுகள் பற்றிய பகிர்வை பாலு மகேந்திரா நூலகத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர்களில் ஒருவரான முனியப்பன் துலாபரணி மேற்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து, இச் சிறுகதைப்போட்டியின் முதற்கட்ட தெரிவுக்குழுவில் கலந்துகொண்ட நடுவர்களில் ஒருவரான சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியின் வணிகவியல் துறை உதவி பேராசிரியை செல்வி.எட்.பிரியதர்சினி அவர்கள், சிறுகதைகள் வாசித்த அனுபவத்தினைப் பகிர்ந்துகொண்டார்.
அடுத்து, எழுத்தாளர் திரு.தீன் அவர்கள் மூன்றாம் பரிசு பெற்ற கதையை அறிவித்து, கதை பற்றிய விமர்சனப் பார்வையிலான கருத்தைத் தெரிவித்தார்.
தொடர்ச்சியாக, சிறுகதைப் போட்டியின் மூன்றாம் பரிசுக்குரிய வெற்றியாளரான "மண்ணி " சிறுகதையின் எழுத்தாளர், தருமபுரி மாவட்டத்தை வதிவிடமாக் கொண்ட சிவம் முனுசாமி அவர்கள் தனது வெற்றியாளர் உரையினை நிகழ்த்தினார்.
அடுத்து, பதிப்பாளர் திரு.சந்தியா நடராஜன் அவர்கள் இரண்டாம் பரிசு பெற்ற கதையை அறிவித்து, கதை பற்றிய விமர்சனப் பார்வையிலான கருத்தைத் தெரிவித்தார்.
தொடர்ச்சியாக, சிறுகதைப் போட்டியின் இரண்டாம் பரிசுக்குரிய வெற்றியாளரான “பாரதூரம்” சிறுகதையின் எழுத்தாளர், நெய்வேலியை வதிவிடமாக் கொண்ட ச.செந்தில்குமார் (பாரதிகுமார்) அவர்கள் தனது வெற்றியாளர் உரையினை நிகழ்த்தினார்.
எழுத்தாளர் திரு.நாறும்பூநாதன் அவர்கள் முதலாம் பரிசு பெற்ற கதையை அறிவித்து, கதை பற்றிய விமர்சனப் பார்வையிலான கருத்தைத் தெரிவித்தார்.
தொடர்ச்சியாக, சிறுகதைப் போட்டியின் முதலாம் பரிசு பெற்ற வெற்றியாளரான “புது நீதி… புதுப் பாதை...” சிறுகதையின் எழுத்தாளர், சென்னையை வதிவிடமாக் கொண்ட எஸ்.பர்வின் பானு அவர்கள் தனது வெற்றியாளர் ஏற்புரையை நிகழ்த்தினார்.
இறுதியாக, பாலு மகேந்திரா நூலக தலைமை நிர்வாகியான கணேசலிங்கம் பதுர்சன் அவர்களின் நன்றி உரையுடன் நிகழ்வுகள் யாவும் இனிதே நிறைவுற்றது.